தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி தற்போது 48 வட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது, இதன் மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சரவணன் என்பவரும் (வட்டம் 17), துணை மேயராக திமுகவை சேர்ந்த சு.ப.தமிழழகனும் (வட்டம் 26) உள்ளனர். மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், பெரிய அளவில் சீர்குலைந்து, பல இட்டங்களில் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி, பொது மக்களை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.
அவற்றை முழுமையாக சரி செய்திட, முதற்கட்டமாக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தலைமையில், சிறப்பு ஆய்வு கூட்டம், கும்பகோணம் நால்ரோடு அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மேயர் கே.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், பொறியாளர் லலிதா, மாநகர் நல அலுவலர் மரு.பிரேமா, உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
முதலாவது வட்டம் தொடங்கி 48 வட்ட மாமன்ற உறுப்பினர்கள் வரை, ஒவ்வொருவரும் தங்கள் வட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட குறைகளை எடுத்துரைத்தனர். 2வது வட்ட மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி (திமுக) பேசும்போது, "எனது வட்டத்திலும் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளது. இதனை விரைந்து சீரமைத்து தந்தால் தான் எனது வட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்கு கேட்க முடியும்" என தெரிவித்தார்.
மாமன்ற உறுப்பினர் வரிசையில் 17வது வட்டத்தில் இருந்து தேர்வு பெற்ற மேயர் கே.சரவணன், தனது வட்டத்திலும் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளதாகவும், உடைந்துள்ள பல மேன்ஹோல்கள் மாற்றப்படாமல் உள்ளதாகவும், அங்குள்ள வடிகால் வாய்காலை தூர்வாரி சீரமைத்தால் தான் மழை நீர் வடியும் என்றும், இல்லை எனில் மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி வீட்டிற்குள் புகும் அவலமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இது குறித்து 6 மாதங்களாக மாநகராட்சி அலுவலர்களை சீரமைத்து தர சொல்லி விட்டதாகவும், ஆனால் இதுவரை செய்வில்லை என மேயரான தனது வட்டத்திலேயே குறைகளை சரி செய்ய முடியவில்லை என்ற ஆதங்ககத்தை எம்எல்ஏ முன்பு வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து உடனடியாக அதிர்ச்சியடைந்து பதில் அளித்த எம்எல்ஏ, மாநகராட்சி அலுவலர்களை மேயரின் குறைகளையே ஆறு மாத காலமாக சரி செய்யாதது சரியல்ல என்றும், அதனை உடனடியாக சீரமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த சிறப்பு ஆய்வு கூட்டத்தில், அதிமுகவை சேர்ந்த 19 வட்ட உறுப்பினர் ஆதிலட்சுமி இராமமூர்த்தி, 33வது வட்டத்தை சேர்ந்த கௌசல்யா, 35வது வட்டத்தை சேர்ந்த ப.குமரேசன் ஆகிய மூன்று மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து பேசிய கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், "தற்போதுள்ள பாதாள சாக்கடை இடர்பாடுகளை மட்டும் நீக்க சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு நிதி தேவைப்படுகிறது. மாநகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்ட பிறகு மாநகராட்சி எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட தாராசுரம் பேரூராட்சி பகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவாக்கம் செய்வதை சேர்த்தால் மொத்தம் 135 கோடி ரூபாய் அளவிற்கு நிதியுதவி தேவை என்றும் முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டது" என கூறினார்.
மேலும் பேசிய சட்டமன்ற உறுப்பினர், இது குறித்து துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசி, இதற்கு தேவையான நிதியை மாநகராட்சிக்கு பெற்று தருவதாக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உறுதியளித்தார்.