தஞ்சாவூர்: திருவாரூரில் இன்று (பிப்.19) மாலை 5 மாவட்டங்களை உள்ளடக்கிய காங்கிரஸ் கட்சியின் மண்டல கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் சோழன் விரைவு ரயிலில் நண்பகல் கும்பகோணம் வந்தடைந்தார்.
அவருக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன், தலைமையில், கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன் முன்னிலையில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, மலர் மாலைகள், சால்வைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, ரயில் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில், அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்ந்திருக்கிறது. பொது மக்கள் பணத்தில் இயங்கும் பாரத ஸ்டேட் வங்கி, எல்ஐசி ஆகியவை பிரதமர் அலுவலக அழுத்தம் காரணமாக, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்த வகையில் ரூபாய் 50 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்தித்துள்ளது.
இந்த ஊழல், முறைகேடு, அமெரிக்கா வரை பரவியுள்ளது. இது குறித்து பிரதமர் வாய்திறக்க மறுக்கிறார். நிதியமைச்சரோ, சிபி பார்த்துக் கொள்ளும் என பதிலளிக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருபடி மேலாக சென்று, இந்த கேள்விக்கு, காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளது என்று பதிலளிக்கிறார். ராணுவ வீரர் உயிரிழப்பில் சட்டம் தன் கடமையை செய்யும். இன்று கூட பெண் காவலர் ஒருவர் சாராயம் கடத்தியதாக செய்தி வந்துள்ளது.
இதற்கும் அரசாங்கத்திற்கும் என்ன சம்மந்தம், யார் தவறு செய்தாலும், சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. விக்ரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகள் 6 ஆண்டுகளை கடந்தும் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. மதுரை எய்ம்ஸ் வருமா வராதா என்ற தலைப்பில் பேச்சு போட்டியே நடத்தலாம். இது பற்றி எல்லாம் இங்குள்ள பாஜக தலைவர் கண்டுகொள்வதில்லை.
அவர்களது செல்வாக்கை பயன்படுத்தி விரைவுபடுத்தவும் இல்லை, அதற்காக போராடவும் முன்வரவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்த போதும், அவர்கள் இன்னும் ஒன்று சேரவில்லை, தனித்தனியாக தான் இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தேர்தல், ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. ஒரு இடைத்தேர்தல். இத்தேர்தல் வாயிலாக தமிழக அரசின் 18 மாத திமுக ஆட்சிக்கு வாக்காளர்கள் மதிப்பீடு வழங்குவார்கள். அதற்கு சான்றிதழ் வழங்கும் தேர்தலாக இது அமையும். ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக்குறைவால் காலமானார்