கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியுள்ள தென்னை விவசாயிகள், புதிதாகத் தென்னங்கன்றுகளைப் பயிரிட்டு வளர்த்துவருகின்றனர். இந்த தென்னங்கன்றுகள் வளர்ந்து பலன் தர இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால் வருமானம் ஈட்ட அப்பகுதி விவசாயிகள் மல்லிகைச் செடிகளை ஊடுபயிராகப் பயிரிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மழை காரணமாக மல்லிகைப் பூ விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதனால் மல்லிகை வரத்து குறைந்து, ஒரு கிலோ 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதேபோல சம்பங்கி பூவும் வரத்து குறைந்துள்ளது. இனிமேல் மழை குறைந்தாலும் பாதிக்கப்பட்ட செடிகள் மீண்டும் பழைய நிலைக்கு வர சில காலம் ஆகும் என்பதால் நெற்பயிருக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவது போல, மல்லிகைச் செடிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: மதுரைப் பெண்களைக் காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த சென்னை சகோதரர்கள் - நெஞ்சை உருக்கும் சம்பவம்!