தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டப்பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் 2020-2021 ஆண்டில் ஊரக பகுதிகளில் உள்ள 195 ஊராட்சிகளில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், 95 கோடியே 97 லட்சத்திலும், 15 ஆவது நிதிக்குழு மானிய நிதி, பிற நிதிகளிலிருந்து ஒருங்கிணைத்து சுமார் 45 கோடியும் என மொத்தம் 140 கோடியே 97 லட்ச மதிப்பீட்டில் ஊரக பகுதியில் உள்ள தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல், அரசுப் பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தி ஒப்பந்தக்காரர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து ஜனவரி 2021க்குள் முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட, 195 கிராம ஊராட்சிகளில் உள்ள தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.பழனி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, உதவி இயக்குநர் முருகேசன், ஒப்பந்ததாரர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.