இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த வருபவர்களிடம் மணமகன், மணமகள் ஆகிய இருவரின் வயதை நிரூபிக்கும் சான்று அவசியம் பெற வேண்டும்.
அதில் 18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளர் மற்றும் குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006ன்படி, குழந்தை திருமணம் நடைபெற உடந்தையாக இருந்ததாக கருதப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
அதேபோல, கோயில்களில் திருமணம் நடத்த வருபவர்களிடம் கோயில் செயல் அலுவலர்கள் மணமகளின் வயதை நிரூபிக்கும் பள்ளி ஆவணம், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை அவசியம் பெற்று 18 வயது ஆகிவிட்டது என்பதை உறுதி செய்த பின்னரே திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும்.
இதுகுறித்து புகார்களை குழந்தைகள் உதவி மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1098, மாவட்ட சமூக நல அலுவலகம் (04362-264505) மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு (04362-237014) ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.