தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (55). இவர் அணைக்காடு பகுதியில் பலாப்பழம் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 25) மாலையிலிருந்து இவரைக் காணாததால், இவரது குடும்பத்தினர் தஞ்சை மாவட்டம் முழுவதும் இவரைத் தேடி அலைந்துள்ளனர்.
இதற்கிடையே, இன்று (ஜூன் 26) காலை அணைக்காடு காட்டாற்று பாலம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ஸ்டீபன் ராஜ் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில், காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர், ஸ்டீபன் ராஜின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.