அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து 20 தொன்மையான ஐம்பொன் சிலைகள் கடந்த 2000 ஆம் ஆண்டில் திருடப்பட்டது தொடர்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் தொடர்பு இருப்பது தெரிய வரவே, 2012 ஆம் ஆண்டு சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினர் ஜெர்மன் நாட்டில் இருந்த சுபாஷ் சந்திரகபூரை, சர்வதேச போலீஸ் உதவியுடன் முறைப்படி இந்தியாவிற்கு கொண்டு வந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 20 சிலைகளில் நடராஜர், விநாயகர், வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, சக்கரத்தாழ்வார், ஆகிய ஆறு சிலைகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சுபாஷ் சந்திரகபூர் தற்போது விசாரனை கைதியாக சிறையில் உள்ளார்.
அதுபோல பாக்கியகுமாரும் மற்றொரு வழக்கில் சிறையில் உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பிச்சுமணி அப்ரூவராக மாறியுள்ளார். மற்ற மூவர் பிணையில் உள்ளனர் பரபரப்பான இச்சிலை திருட்டு வழக்கு, சிறப்பு நீதிமன்றமான, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
முதலில் இந்த வழக்கு 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்திலும் அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினரின் சிலை திருட்டு வழக்குகள் அனைத்தையும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றமான, கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றினர். அதனைத் தொடர்ந்து சுபாஷ் சந்திரகபூர் மீதான வழக்குகள் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில், நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இக்குற்றவாளிகளின் செயல்பாடு இருந்ததாகவும், கபூர் இச்சிலை திருட்டு காரணமாக, அமெரிக்க பிரஜை பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்துள்ளதையும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ் சந்திரகபூர், சஞ்சீவ் அசோகன், பாக்கியகுமார் ஆகிய மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூபாய் 8 ஆயிரம் அபாரதம் விதித்தும், மாரிச்சாமி, ஸ்ரீராம் (எ) சுலோகு, பார்த்திபன் ஆகிய மூவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூபாய் 8 ஆயிரம் விதித்து அபராதம் விதித்தும் நீதிபதி சண்முகப்பிரியா பரபரப்பு தீர்ப்பு வழக்கினார்.
இதையும் படிங்க: "இது என் பிழைப்பு"... சமூக சிந்தனையோடு சாலைகளில் பரப்புரை மேற்கொள்ளும் சோப் ஆயில் வியாபாரி..