மாவீரர் தினத்தை முன்னிட்டு (நவ.27) ஆம் தேதி தஞ்சையை அடுத்த விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், ’இலங்கையில் முன்பை விட மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சிங்களர் மட்டுமின்றி, தமிழர்களும் ஏற்கனவே இருந்த நிலையை விட மோசமான நிலையில் உள்ளனர்.
வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு அங்கு இல்லை. இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் செய்த உதவி சிறுபகுதிகூட அவர்களுக்கு சேரவில்லை. ஆகவே இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் செய்த உதவிகள் தமிழர் பகுதிகளுக்கும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் ஈழப் போராட்டம் என்பது திருப்பு முனையில் வந்து நிற்கிறது. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி இருப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருப்பவர்கள்(மத்திய அரசு) இந்த உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சனையும் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கின்றன என்பதை டெல்லியில் இருப்பவர்கள் உணர்ந்து இந்த அபாயத்தை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு முன் வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ஈபிஎஸ் ஒரு காமெடி பீஸ்’ - ஓபிஎஸ் ஆதரவாளர் கொந்தளிப்பு!