நூறாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கடற்பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரிசக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக வேதாரண்யத்தில் விளையும் உப்பைப்போன்று அதிராம்பட்டினத்தில் விளையும் உப்பும் உணவு பயன்பாட்டிற்கு உகந்த உப்பு என்பதால் மற்ற பகுதிகளைவிட இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு வரவேற்பு இருந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் அமோகம்!
ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின்போது அதிராம்பட்டினத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்காகவே அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தொடங்கினர். இதற்கென 1922 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பகுதியில் உப்புத்துறை அலுவலகம் கட்டப்பட்டு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் உப்பளத் தொழிலாளர்கள் தங்குவதற்கு என குடியிருப்புகளும் அமைத்துக் கொடுத்து உப்பளத் தொழிலை லாபகரமான தொழிலாக செய்துவந்தனர். கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் இணைந்து 5000 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளடைவில் நலிவு!
ஒரு காலத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்த இந்த உப்பு உற்பத்தி தொழில் தற்போது பல்வேறு காரணங்களால் நலிவடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு அதாவது பாத்தி கட்டுதல், நீர் பாய்ச்சுதல், கால் மிதித்தல் போன்ற ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் கஜா புயலால் கடலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள உப்பளங்களில் கடல் நீர் புகுந்தது. அப்போது கடல் எது? உப்பளம் எது? என்று தெரியாத அளவிற்கு உடைந்த படகுகள் உப்பளங்களில் மிதந்தன. இதனால் உப்பு உற்பத்திக்கு கடுமையாக செலவு செய்துவிட்டு உப்பளங்கள் இந்த நிலையில் இருப்பதை கண்ட உப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் கவலை அடைந்தனர்.
அடுத்தடுத்த புயலால் சபிக்கப்பட்ட தொழிலாளர்கள்!
இதைத்தொடர்ந்து கடல்நீர் வடிந்தப் பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி செய்வதற்காக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டபோது அடுத்தடுத்த புயலின் தாக்குதலால் உப்பளங்கள் சேதம் அடைந்தன. அதை அடுத்து இடைவிடாது மழை பெய்து வந்ததாலும் உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பில்லாமல் போனது. இப்படி இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலை தேடிசெல்லும் நிலை வந்தது. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த உப்பு உற்பத்தி தொழில் தற்போது நலிவடைந்து போனது உப்பளத்தொழிலாளர்களுக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: