டெல்டா மாவட்டத்தின் பெருமையாக தஞ்சை பெரிய கோயில் விளங்குகிறது. தஞ்சாவூருக்கு பெரிய அடையாளமாகவும் உள்ளது. பழைய பாரம்பரியத்துக்கு பெயர்போன தஞ்சாவூரில் 'செல்லம்மாள் உணவகம்' வெகுபிரபலம். ஏனெனில், இடம், பரிமாறும் உணவுகள், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் ஆரோக்கியமான பாரம்பரியம் கொட்டிக் கிடக்கிறது. மண் வாசம் சிறிதும் குறையாமல், பசியோடு வருபவர்களுக்கு சுவை மட்டுமின்றி ஆரோக்கியமான உணவையும் பரிமாறி வருகிறது.
செல்லம்மாள் உணவகத்தை திருச்சி மோகன் - செல்லம்மாள் தம்பதி தொடங்கியுள்ளனர். மோகன் அரசு துறையில் பணிபுரிந்தவர். அவரது மனைவி செல்லம்மாள் துணையுடன் உணவகத்தை நடத்தி வருகிறார். கடைக்குள் சென்றால் முழுவதும் மண் பானைகளில் உணவுகள் பரிமாறப்படுகின்றன. தப்பித்தவறி கூட பிளாஸ்டிக்கை பார்க்க முடியவில்லை. சாப்பிட வருபவர்களுக்கு வாழை இலையில் உணவு, மண் பானை சோறு, குழம்பு, பொறியல் உள்ளிட்ட அனைத்தும் மண்ணால் ஆன பாண்டங்கள் மட்டுமே. சமையல் செய்வதற்கு கூட நவீன இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்துவதில்லை.
மண் பாண்டத்தில்தான் உணவு தயார் செய்யப்படுகிறது. அம்மி, மிளகாய், பருப்பு கடைதலுக்கு என்பதற்காக உருவாக்கப்பட்ட வித்தியாசமான இயந்திரங்கள் அங்குள்ளன. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், மாட்டின் உதவியோடு செக்கில் ஆட்டி தயாரிக்கப்பட்டதையே பயன்படுத்துகின்றனர். இந்த உணவகத்தின் தனித்துவமே மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எதுவும் இங்கு இல்லை. குடிக்கும் நீரில் தொடங்கி சாப்பிடும் உணவு வரை அனைத்தும் சத்து நிறைந்தது மட்டுமே. மரப்பட்டை, வெட்டி வேர், சீரகம் கலந்த நீரைத்தான் குடிக்க கொடுக்கின்றனர். சாமை அரிசி. கருடன்டா சம்பா, புழுங்கல் அரிசி உள்ளிட்டவையில் சாதம் வகைகள், கீரை வகைகள், பருப்பு உருண்டை குழம்பு, பாரம்பரிய ரச வகைகள் என பட்டியல் நீளம்.
உணவகத்தின் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகிறது. காய்கறி கழிவுகள், நீர் கழிவுகள் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், வீணாகும் தண்ணீரும் மழை நீர் சேமிப்பின் மூலம் வடிகாலில் செலுத்தப்படுகிறது. நவீன உலகத்தில் அனைவரும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பாரம்பரிய உணவை நோக்கி மீண்டும் திருப்புகிறது இந்த செல்லம்மாள் உணவகம்.