தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு கரும்படு சொல்லியம்மை உடனாய அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி ஆலயம் உள்ளது. இங்கு தனி சந்நிதி கொண்ட பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தியன்று விடிய விடிய தேனபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த தேனபிஷேகத்தில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் இந்த தேனபிஷேக காட்சியை தரிசித்து வைக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு தேனபிஷேகத்திற்குள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த விநாயகர் சிலையின் மேல் ஊற்றப்படும் தேன் முழுவதும் சிலையே உறிஞ்சிவிடும் என்பது இந்த கோவிலின் சிறப்பாகும். இந்த சிறப்பு நிகழ்வினையொட்டி விநாயகரின் சிறப்பை விளக்கும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.