தமிழ்நாட்டில் ஏற்பட்ட புரெவி புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அதிக அளவு நிரம்பிவருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஹோல்ஸ் ஒர்த் (holdsworth) அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தண்ணீர் இல்லாமல் இருந்துவந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழை காரணமாக அணைக்கட்டு 90 விழுக்காடு நிரம்பி, அணைக்கட்டில் உள்ள ஷேடர்ஸ் வழியாகத் தண்ணீர் வெளியேறிவருகிறது. இதைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் அணைகட்டிற்கு வந்து அணைக்கட்டின் அழகை ரசித்துச் செல்கின்றனர்.
இதேபோல், தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட உள்ள காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தில் காவிரி நீர் புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில்தான் சேமித்துவைக்கப்படுகிறது. இந்தக் கண்மாய் 66 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்போது தூர்வாரப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழை காரணமாக 40 விழுக்காடு தண்ணீர் கண்மாயில் நிரம்பியுள்ளது.
தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் வாய்க்கால்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் தண்ணீர் வழிந்து ஓடுவதால் ஆங்காங்கே கிராம மக்கள் வலைகள் அமைத்து மீன் பிடித்துவருகின்றனர். மேலும் வாய்க்கால்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் செல்லும் மீன்கள் துள்ளிக் குதித்து வலைகளில் விழுவதால் மீன் பிரியர்கள் அந்த மீன்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: வைகையில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - வெள்ள அபாய எச்சரிக்கை