உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கரோனாவுக்கு எதிரான போரில் முன்னணி வகிக்கும் இவர்களை சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வரும் செயல்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி சுவரொட்டி ஒட்டி வரும் நிலையில் கரோனாவுக்கு நன்றி தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் சுவரொட்டி அடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் பலர் தங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு செய்து வருகின்றனர்.
இதுபற்றி இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி கூறுகையில், “கரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட நாள்முதல் இந்த நோயை கட்டுப்படுத்த மாத்திரை, மருந்துகள் இல்லாமல் எதிர்ப்பு சக்தி மட்டுமே பிரதானமாக கருதப்பட்டது. குறிப்பாக, தகுந்த இடைவெளி போன்றவை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது.
அதற்காக நமது மூதாதையர்கள் பின்பற்றி வந்த தமிழர்களின் பண்பாட்டு, பழக்க வழக்கங்கள் தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இருகரம் கூப்பி வணக்கம் வைப்பது, மஞ்சள் தேய்த்து குளித்தல் உள்ளிட்டவை சரியான நடவடிக்கையாக அரசு சார்பில் விளம்பரங்களில் ஒளிபரப்பப்பட்டதால் முக்கியத்துவம் பெற்றது. இதனால் கை கொடுப்பது, கட்டி அணைப்பது போன்ற பண்பாட்டு சீரழிவுகள் புறந்தள்ளப்பட்டன.
பல்வேறு கிராம மற்றும் நகர பகுதிகளில் கிருமிநாசினி மருந்தாக வேப்பிலை மஞ்சள், உப்பு கலந்த தண்ணீரை இளைஞர்கள் கிராமம் முழுவதும் தெளித்தனர். அனைவரும் வேப்பிலையை வீட்டு முன்பாக வைத்தனர். பல்வேறு நகரப்பகுதிகளில் வேப்பிலை விற்பனைக்கு வருமளவுக்கு வேப்பிலையின் மருத்துவக் குணம் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. கபசுரக் குடிநீர் என்ற எதிர்ப்பு சக்தி உள்ள சித்த மருத்துவத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நம் பண்டைய கால விளையாட்டுகள் நம் வாழ்வில் ஏற்படும் அர்த்தத்தை குறிக்கின்ற வகையில் இருந்து வந்த தாயம், பல்லாங்குழி, கயிறு தாண்டுதல், பரமபதம், பட்டம் விடுதல் போன்ற நம் வாழ்வியலை உணர்த்தும் வகையில் உள்ள விளையாட்டுகள் ஊரடங்கால் மீண்டும் நமது இல்லத்திற்கு வந்தடைந்தது.
பல்வேறு விஷயங்கள் இந்த கரோனா தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தாலும், வருங்காலத்தில் நாம் சுத்தமாக இருப்பதும், மேலைநாட்டு கலாசாரத்தை புறந்தள்ளி விட்டு நமது தமிழர் கலாசாரத்தை கடைப்பிடித்தாலே நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதை உணர்த்தியும் உள்ளது. இதனால், இந்த சுவரொட்டியை நாங்கள் அடித்தோம். இதை தவிர வேற எந்த உள்நோக்கமும் இல்லை” என கூறினார்.
இதையும் படிங்க : சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூல்!