தஞ்சாவூர்: பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கூலி தொழிலாளியான பாலமுருகன்-கமலம் தம்பதியரின் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் வீடு முற்றிலும் எரிந்து அதிலிருந்த பொருள்கள் அனைத்தும் நாசமாகின. இதனால் இத்தம்பதியினர் சிறு குழந்தையை வைத்துக்கொண்டு வீடு, உடைமைகளை இழந்து தவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் தலைமையில் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது பாலமுருகன் வீடு இல்லாமல் தவித்து வருவதை கேள்விப்பட்ட மருத்துவர் சௌந்தரராஜன், அங்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு வீடு கட்டி தருவதாகவும் உறுதியளித்தார்.
தம்பதியரின் துயர் நீக்கிய மருத்துவர்
அதன்பேரில் மருத்துவர் தனது சொந்த செலவில் குடிசை வீடு ஒன்று கட்டிக்கொடுத்து அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், இன்று (ஜூலை 5) அந்த ஏழை தம்பதிக்கு வீட்டிற்குத் தேவையான பீரோ, நாற்காலி, புத்தாடைகள், இதர பொருள்களுடன் சீர்வரிசையாக எடுத்துச்சென்றார். மேலும், அவர் கிரகப்பிரவேசத்தையும் நடத்திவைத்தார்.