தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் பொன்னாப்பூர் மேல்பாதி கிராமத்தில் பிறந்தவர் ப.சஞ்சய்காந்தி என்கின்ற வழக்கறிஞர். இவரது பெற்றோர் வ. பன்னீர்செல்வம் & சுலோச்சனா ஆவர். சஞ்சய்காந்திக்கு திருமண விழா இன்று காலை 9 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், கீழ்வேங்கைநாடு பருத்தியப்பர் கோயிலில் நடைபெற்றது.
யார் இந்த சஞ்சய்காந்தி?
75 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாப்பூர் கீழ்பாதியில் புகழ்பெற்று விளங்கிய குடும்பம் சஞ்சய்காந்தியின் குடும்பம். இப்பகுதியில் மராம் வீட்டு குடும்பம் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் எளிமையாகப் புரியும். இவர் பொன்னாப்பூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மேலஉளூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் பள்ளிப் பருவத்திலேயே இலக்கியம், விளையாட்டு போன்ற போட்டிகளில் முதல் இடத்தையும், கல்வியில் முதன்மையாகவும் விளங்கினார்.
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் தமிழ்ச் சங்கத் தலைவராக 1993ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை பல்வேறு நிகழ்வுகளை நடத்தி தமிழ் பணியாற்றி வரலாற்றில் பதிவு செய்துள்ளார். இவருக்கு தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதினை மத்திய அரசு 2018ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது. சமீபத்தில் இவர் தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.
2011 முதல் 2017ஆம் ஆண்டுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியில் இருந்த போது பல்வேறு வழக்குகளில் வாதாடி தமிழ்நாடு அரசுக்கு பெருமை தேடி தந்துள்ளார். காஞ்சிபுரம் சில்க், தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, திருபுவனம்பட்டு சேலை, சேலம் வெண்பட்டு வேஷ்டி, ஆரணிப்பட்டு, பவானி சமுக்காளம், மாமல்லபுர கற்சிற்பம், பத்தமடை பாய், கோவை கோரா காட்டன், மதுரை சுங்கடி சேலை போன்ற பதினெட்டுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டின் பொருள்களை புவிசார் குறியீடு சட்டத்தில் வெற்றிகரமாக பதிவு செய்து தமிழ்நாடு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளை பதிவு செய்து கொடுத்துள்ளார். அறிவுசார் சொத்துரிமை பற்றி தமிழில் நூலையும், ஓவியம் மற்றும் கைவினை என்கிற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். கடந்த 20 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிவதோடு நின்றுவிடாமல் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தில் வல்லுநராகவும் விளங்குகிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (2019 ஜனவரி) இவர் ஆற்றிய உரை மிகவும் கவனிக்கத்தக்கது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்த வழக்கறிஞர் சஞ்சய்காந்திக்கும் கீழக்குறிச்சியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும் இன்று நடைபெற்ற திருமணத்தில் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.