தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் மகாராஜபுரத்தில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ முகாம் நடத்துகிறோம் எனக் கூறி, குறைந்த தொகை செலுத்தி மருத்துவ முகாமில் ஊர்மக்களை கலந்து கொள்ளுமாறு, முதல் கட்டமாக 80 குடும்பங்களுக்கு மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் கூறியது போல் நேற்று (ஆகஸ்ட் 13) நான்கு நபர்கள் மகாராஜபுரத்திற்கு சென்று, ஊராட்சி மன்ற தலைவரிடம் மருத்துவ முகாம் நடத்த ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை கேட்டு, அங்கு காலை முதல் மாலை வரை ஒரு நபருக்கு ரூ. 30 என வசூலித்து, 40 நபர்களுக்கு பரிசோதித்து உள்ளனர்.
அதில் பரிசோதனை செய்ய வந்த ஒரு சிலரிடம் தங்களுக்கு சிடி ஸ்கேன், பிளட் டெஸ்ட் எடுப்பதற்கு அதிக தொகை ஆகும் எனவும் இந்த முகாமில் நீங்கள் கலந்து கொள்வதால் குறைந்த செலவில் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியும், அதற்கான பணத்தை இங்கேயே கட்டி விட்டு கும்பகோணத்திற்கு சென்று டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மாத்திரை வாங்கி சாப்பிட்ட ரமணி என்ற பெண்ணுக்கு, வீட்டிற்கு சென்றதும் மயக்கம் ஏற்படவே, அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு, அந்த மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்று, என்ன மாத்திரை கொடுத்தீர்கள் என அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
அப்போது மருத்துவ முகாமில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், அவர்களது டாக்டர் சர்டிபிகேட்டை காட்டுமாறு கேட்டும், சந்தேகித்தும் அவர்களை அந்தப் பள்ளியிலேயே சிறை வைத்து பின்னர் சோழபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஊர் மக்களால் சிறை பிடித்தவர்களை விடுவித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மருத்துவர்கள் தானா என்பது குறித்தும், அவர்கள் அளித்த மருந்து குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஒரு கிராமத்தில் மருத்துவர்கள் எனக் கூறி இம்மாதிரியான மோசடியில் ஈடுபட்டதால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இந்த மருத்துவ முகாமில் எந்த மாதிரியான மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியாததால், அப்பகுதி மக்கள் உடனடியாக தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை அப்பகுதியில் நடத்தி, அவர்களை பரிசோதிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த முகாமில் அவர்களிடம் சில ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகைகள் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் சோழபுரம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சப்ஸ்கிரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.. ரூ.18 லட்சம் மோசடி - 5 பேர் சிக்கியது எப்படி?