தஞ்சாவூர்: ஒரத்தநாடு தாலுகா பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சென்னியவிடுதி ஊராட்சி, தோப்பநாயகம் கடைவீதியில் வேலன், லெட்சுமி, ராசு, லத்தீபா பீவி, வீரையன் ஆகியோர் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக வீடு கட்டி வசித்துவருகின்றனர். மேலும், கடை ஒன்றை அமைத்து அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
வீடுகளை காலி செய்ய அவகாசம்
இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி டீக்கடை, சலூன் கடை, மளிகைக் கடை ஆகியவற்றை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியதாகவும், லத்தீபா பீவி, வீரையன் ஆகியோர் வீடுகளை காலி செய்ய அவகாசம் தந்து சென்றதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
கடந்த முறை பொதுப்பணித் துறையினர் தங்களை அப்புறப்படுத்த முயன்றபோது அப்போதைய மாவட்ட ஆட்சியர் மா.கோவிந்தராவ் மாற்று இடம் தருவதாக உறுதியளித்த நிலையில், தற்போது தாங்கள் வீடு இன்றியும், பிழைப்பு நடத்த வழியின்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
நிவாரணம் வழங்கிய எம்எம்ஏ
எனவே, தங்களுக்கு மாற்று இடம் தந்து, வீடு கட்டித் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையறிந்த பேராவூரணி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு, தனது சொந்த பணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
இதையும் படிங்க: கிராமப்புறங்களில் வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு!