தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவையாறு, பாபநாசம், அய்யம்பேட்டை, மாகாளிபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் வெல்லம் தயாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.
இந்த அச்சு வெல்லத்திற்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதால், அரசே நேரடியாக வெல்லத்தை கொள்முதல் செய்து, பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் முதல்முறையாக தமிழ்நாடு வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லத்தை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (டிச.29) தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெல்லம் ஏலம் விடும் பணி நடைபெற்றது. இதனை பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி மற்றும் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க கால நீட்டிப்பு