சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துள்ளதாகவும், கூடுதல் கௌரவ விரிவுரையாளர்களை விரைவில் உருவாக்கவிருக்கிறோம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் 'Outcomes Based Education Workshop Series' என்ற கல்விப் பட்டறையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் கோபால் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அதிகாரிகளும், மாநில முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்களும் பங்கேற்றனர்.
அப்போது, நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் கோவி.செழியன், "உயர்கல்வியின் மேம்பட்ட நடவடிக்கைகளுக்கு மாணவர்களுடைய கல்வித்திறன் எப்படி இருக்க வேண்டும், அதற்கு உயர்கல்வித்துறை என்னென்ன பணிகளை முன்னேற்பாடு செய்துத்தர வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்:
உயர்கல்வித்துறை தமிழ்நாட்டில் உற்று நோக்கக்கூடிய உச்ச நட்சத்திர துறையாக இருக்கிறது. திறனடிப்படைவில் கல்வி கற்கும் முறை அமைந்தால், அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து திறனும் சென்றடையும். உயர்கல்விதுறையில் நல்ல ஆசிரியர்களும், அதிகாரிகளும் உள்ளனர். ஏற்கனவே இருந்த குறைகளை அகற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
திறனடைவு கல்வி முறை எடுத்துரைக்கப்பட்டு எந்த திறன் மாணவர்களுக்கு வேண்டும், அந்த திறனை மாணவர்களுக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும், கற்றல் கற்பித்தல் திறனை உறுதி செய்யும் வகையில் தேர்வு முறை, கல்வி முறையில் என்ன முன்னேற்றம் வேண்டும் போன்றவற்றை கண்டறிய வேண்டும் என்பது தான் இந்த கருத்தரங்கின் நோக்கம். இந்த கல்விமுறையின் மூலமாக மாணவர்களின் திறமை, தன்னம்பிக்கை மேம்படும். அதேபோல கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது, மாணவர்கள் தொழில் முனைவோராக வளர்ந்து வருவார்கள். இதனால் சமூகத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோவி.செழியன், "கற்றல், கற்பித்தல், தேர்வு முறை, அதன் நோக்கம் இவை அனைத்தும் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதுதான் உயர்கல்விதுறையின் முக்கிய நோக்கம். சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த பயிலரங்கம் துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்டல அளவிலும் கல்லூரி அளவில் இந்த பயிலரங்கங்கள் நடைபெறும். திறனடைவு கற்றல் முறை குறித்தான விழிப்புணர்வை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.
ஒரே ஆண்டில் சம்பளம் உயர்வு:
பல்கலைக்கழக மானிய குழு கௌவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது குறித்தான கேள்விக்கு, "கௌவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை தான் ரூ.5 ஆயிரம் உயர்த்தி, 15 ஆயிரமாக இருந்த சம்பளத்தை 20 ஆயிரமாக உயர்த்தி தந்தார்கள். இந்த சம்பள உயர்வும் ஆட்சி முடியும் நேரத்தில் தான் அவர்கள் வழங்கினார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் 5000 ரூபாயை உயர்த்தி 25,000 ஆக கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளத்தை வழங்கினார்" என்றார்.
2000 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்:
"மேலும், கௌரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் நிதியாக யூஜிசி ஒரு ஆண்டுக்கு 40 கோடி தர வேண்டும். இந்த நிதியை தொடர்ந்து தமிழக அரசு கேட்டு வருகிறது. 2017ல் நிறுத்தப்பட்ட இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனாலும் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சுமார் 2000-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை நியமித்து அவர்களுக்கு பணியை வழங்கியுள்ளது தமிழக அரசு.
கூடுதல் கௌரவ விரிவுரையாளர்களை விரைவில் உருவாக்கவிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து நிரந்தர பேராசிரியர்களை உருவாக்க முன் முயற்சியை உயர்கல்வித்துறை எடுத்து வருகிறது. படிப்படியான முன்னேற்றத்தை பாராட்ட வேண்டுமே தவிர, சில சில குற்றத்தை எடுத்துச் சொல்லி உயர்கல்வித்துறையையும் மாணவ செல்வங்களையும் குறைத்து மதிப்பிடுவது தவறு" என்றார்.
தமிழக அரசின் நோக்கம்:
தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் இல்லாமல் இருப்பது குறித்தான கேள்விக்கு, "கடந்த காலங்களில் இல்லாத வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருப்பது யாரால், எப்படி, எங்கு உருவானது என்பது செய்தியாளர்களுக்கு தெரியும். ஆனாலும், மாணவர்களின் நலன் கருதி உயர்கல்வி துறையின் கருதி நல்ல முடிவுகளை தமிழ்நாடு அரசு எடுக்கும்.
யுஜிசி நடைமுறையை பின்பற்றுவதில் எந்த பின்னடைவும் இல்லை. ஆனால் எந்தெந்த வரைமுறைப்படி சொல்லியிருக்கிறார்களோ அந்த அளவிற்கு ஊதிய விகிதாச்சாரம், வேலை நிமித்தம், இதனை செய்து வர வேண்டும். யுஜிசி சொல்வது போல சில மாநிலங்கள், சில மாற்றங்களை செய்து வருகிறது. ஆனால் நமது அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதலான பேராசிரியர்கள், கூடுதலான ஊதிய உயர்வு உயர்வுகளை வழங்கி உயர் கல்வித்துறையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அரசு நோக்கம்" என பதிலளித்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் அணையைத் திறந்து பேரழிவை ஏற்படுத்தியது யார்? விசாரணை கோரும் இராமதாசு