கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவாக ஆயுதபூஜை நாளையும் (அக்.25), நாளை மறுநாள் (அக்.26) விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் மேலும் துலங்க வேண்டும் எனக் கருதி கொண்டாடும் ஆயுதபூஜை அன்று, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம்செய்து, தோரணம் கட்டி, பொரி, பழங்கள் படையலிட்டு வழிபடுவது வழக்கம். இந்நிலையில், ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்காக தோரணங்கள், பழங்கள், பொரி வகைகள் உள்ளிட்ட பொருள்கள் சந்தைகளில் குவிந்துள்ளன.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், விளார் சாலையில் உள்ள பூச்சந்தையில் இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்கக் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பைவிட இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மல்லிகைப்பூ கிலோ 1000 ரூபாய்க்கும், செவ்வந்திப்பூ 200 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ 300 ரூபாய்க்கும், சாதிப்பூ 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்கள் இன்று காலை முதல் அதிக அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர்.