தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் முதன்முதலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் (சென்னை நீங்கலாக) சுமார் 50 லட்சம் மதிப்பில் SPCA (Society for the Prevention of Cruelty to Animals) அலுவலகத்திற்கு தனி கட்டடம் கட்டப்பட்டு, அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இம்மையத்தில் பிராணிகள் பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் பிராணிகள் விபத்து பராமரிப்பு ஆகியவை செய்யப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், 'தமிழ்நாட்டில் முதன்முதலாக எஸ்பிசிஏ(Society for the Prevention of Cruelty to Animals) அலுவலகத்திற்கு தனி கட்டடம் கட்டப்பட்டு செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரேபிஸ் நோயால் கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை இலகுவாக்கும் வகையிலும், ரேபிஸ் நோயால் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெருநாய் கடியால் மாதத்திற்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பொதுமக்கள் தெருநாய் கடியால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் நர்மதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உப்பாற்று ஓடையில் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள்: அரசு அதிரடி நடவடிக்கை!