தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மரத்துறை கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (44) - உமா (40) தம்பதியினர். இவர்களுக்கு திவ்யா (22) என்ற மகளும், கணேஷ் (20) மற்றும் ரங்கசீர் (18) என இரு மகன்களும் உள்ளனர். மகள் திவ்யா பி.காம் நிறைவாண்டு திருப்பனந்தாள் கல்லூரியில் பயின்று வருகிறார். அதுபோலவே இளையமகன் ரங்கசீரும் பி.காம் 2ஆம் ஆண்டு கும்பகோணம் கல்லூரியில் பயின்று வருகிறார்.
10ஆம் வகுப்பு வரை படித்துள்ள மூத்த மகன் கணேஷ், மாலத்தீவிற்கு எலெக்டிரிக்கல் உதவியாளர் பணிக்காக, கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி கொச்சின் விமான நிலையத்தில் இருந்து சென்றார். இவரை கொச்சின் வரை ரயிலில் சென்று வழியனுப்ப அவரது தந்தை ரமேஷ் சென்றுள்ளார்.
கணேஷை வழியனுப்பி விட்டு மாலை 6 மணியளவில், சிறிது நேரத்தில் ரயிலில் ஊருக்கு புறப்படுவேன் என வீட்டிற்குத் தகவல் சொல்லியுள்ளார். ஆனால் அவர் மறுநாள் ஊர் திரும்பவில்லை. அவரது அலைபேசி எண்ணை தொடர்புகொண்டாலும் வேலை செய்யவில்லை. அவர் குறித்து அதன்பிறகு எந்த தகவலும் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், கொச்சிக்கு நேரில் சென்று புகார் அளித்தும், அதன் பிறகு, பந்தநல்லூர் காவல் நிலையம், திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட்டு, மனு அளித்தும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை.
ரமேஷ் காணாமல் போய் ஆறு மாதங்களைக் கடந்துவிட்டன. தற்போது கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவை அவரது மகள் திவ்யா, தனது தாய் உமா மற்றும் உறவினர்களுடன் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
அதில், “தனது தந்தை மாயமானதால், எனது கல்லூரி படிப்பு மற்றும் தம்பியின் கல்லூரி படிப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. வருமானத்திற்கும் வழியில்லாமல் குடும்பம் நடத்த வழிதெரியாமல் திண்டாடி வருகிறோம். எனவே, மாயமான தனது தந்தையை உடனே கண்டுபிடித்துத் தர வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியரும் உறுதியளித்துள்ளார். மூத்த மகனை கொச்சின் விமான நிலையத்திற்கு வழியனுப்பச் சென்ற தந்தை மாயமான சம்பவம் கும்பகோணம் மற்றும் மரத்துறை கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓசூர் பெண் கொலை: குஜராத்தில் கொலையாளியைக் கைது செய்த தமிழ்நாடு போலீசார்!