தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த மேல்திருப்பந்துருத்தி வேளாண்மை முன்பு கடந்த 2016-17, 17-18 ஆகிய ஆண்டுகளில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்ட முறைகேடுகள் தொடர்பாகவும், வெளிப்படைத்தன்மை வேண்டியும் பல அறப்போராட்டங்கள் செய்தும், 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் 2019 குறுவை, 2020 சம்பா, தாளடி, தோட்டக்கலை பயிர்கள் சுமார் மூன்று லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் மூலம் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தி உள்ளனர். பயிர் அறுவடை சோதனை முடிந்து 60 நாள்களுக்குள் வழங்கப்படவேண்டிய பயிர் காப்பீடு இழப்பீடு தொகை 2019 குறுவை பயிருக்கு தற்சமயம் 200 நாள்களுக்கு பிறகும் வழங்கப்படாமல் இருக்கிறது.
அதேபோல், தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் இதர பயிர்களுக்கு முறையாக காப்பீடு செய்தும் இதுவரை யாருக்கும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை நில உரிமையாளருக்கு 100 விழுக்காடு இருந்தும் பெரும்பாலான விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த காலதாமதத்திற்கு உரிய வட்டியை சேர்த்து வெளிப்படைத்தன்மையுடன் பட்டியல், முகவரி, பரப்புடன் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்திருப்பந்துருத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் தங்கள் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.