கும்பகோணம்: வளையப்பேட்டை மாங்குடி கிராம நடுசாலை வாழைத் தோட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 64 விவசாயிகளின் 53வது நினைவு நாளை முன்னிட்டு, அவர்களை நினைவு கூர்ந்து விவசாயிகள் மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தினர். பின் பல கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களின் கோரிக்கையாக வேளாண்மைக்கும், விவசாயிக்கும் எதிரான, மத்திய அரசின் மின் திருத்தச் சட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும், துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்தினரை அங்கீகரிக்கும் விதமாக அவர்களின் வாரிசுகளுக்கு அவரவர் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கிடவும், வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி, வேளாண் உணவு உற்பத்தி மின் மானியம் வேண்டி தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாராயணசாமி நாயுடு தலைமையில் உழவு மாடு, மாட்டுவண்டி, ஏர்கலப்பைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர், ஆயிக்கவுண்டர் உள்ளிட்ட 64 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதன் 53வது நினைவு நாளை முன்னிட்டு இன்று கும்பகோணம் அருகே வளையப்பேட்டை மாங்குடி கிராமத்தில் நடுசாலையில் உள்ள வாழைத்தோப்பில், ஏராளமான விவசாயிகள் திரண்டு நின்று விவசாய போராளிகளுக்கு மலர்கள் தூவியும், புகழ் முழக்கமிட்டு வீரவணக்கம் செலுத்தினர்.