தஞ்சாவூர்: திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அரவை கரும்பிற்கான நிலுவை தொகை ரூபாய் 300 கோடி மற்றும் விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் ரூபாய் 100 கோடி ஆகியவற்றை உடனடியாக வழங்க கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 34 நாள்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சுவாமிமலை அருகேயுள்ள நாககுடி கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் காசிநாதன் தலைமையில், துணை தலைவர் செல்வம் முன்னிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கரும்பு மற்றும் சங்க கொடியேந்தி, கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், ஆதனூர், திருப்புறம்பியம் மற்றும் பட்டீஸ்வரம் ஆகிய கிராமங்களிலும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விரைவில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வங்கி கடன் ஆகியவற்றை வட்டியுடன் ஆலை நிர்வாகம் வழங்கிட வேண்டும் எனவும், அப்படி வழங்கத் தவறினால் இந்த ஆலையினை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்றும்; கரும்பு விவசாயிகள் சங்க துணைத் தலைவர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அப்படி அரசு ஏற்று நடத்த முன்வராவிட்டால், விவசாயிகளே தங்களது சொத்துக்களை விற்று, இந்த ஆலையை ஏற்று நடத்திட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈஷாவில் இளம்பெண் மரணம்! குழு அமைத்து விசாரிக்க கோரி ஆர்பாட்டம்