தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் அதிமுகவில் பல பொறுப்புகளை வகித்துவந்துள்ளார். தற்போது தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராகவும் இருந்துவருகிறார். பக்கிரிசாமி நேற்று (டிசம்பர் 21) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், மதுரையில் வட்டாட்சியராக இருக்கக்கூடிய தனது நண்பர் தனலட்சுமி என்பவர் தன்னை அணுகி, அவரது மகன் பாஸ்கருக்கு மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளர் பணி வாங்கித் தருமாறு கூறியதாகவும், அதனால் தனது நண்பர் நாமக்கல் எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி என்பவர் மூலமாக அப்போதைய மின்சாரத் துறை அமைச்சராக இருந்த தங்கமணியிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
உதவிப் பொறியாளர் பணிக்கு 30 லட்சம்?
அப்போது தங்கமணி 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பணி நியமன ஆணையை வாங்கிக் கொள்ளுமாறு தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து ஒரு வாரத்தில் பணத்தைத் தயார் செய்து தங்கமணியின் வீட்டில் அவரது மகன் தரணிதரனிடம் 30 லட்சம் ரூபாயைக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் பல மாதங்களாக வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பி கொடுக்காமலும் தங்கமணி ஏமாற்றிவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை ஏமாற்றிய தங்கமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மறைவு: ஸ்டாலின் அஞ்சலி