காவிரியின் குறுக்கே மேகதாது என்கிற பகுதியில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், அம்மாபேட்டை, அம்மன்பேட்டை, குடிக்காடு, செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் எடியூரப்பா உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து, கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சியினரும் அணை கட்டியே தீருவோம் என ஒருமித்த கருத்தில் இருக்கின்றனர். இதேபோல், தமிழக அரசும் "காவிரி காப்பு நாள்" என்ற ஒரு நாளை அறிவித்து கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரிவரை ஒரு நாள் போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.