நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், தஞ்சை அருகே வெள்ளைப் பிள்ளையார் கோயில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னையிலிருந்து தஞ்சை நோக்கிவந்த தனியார் ஆம்னி பேருந்தை சோதனை செய்தனர்.
அதில் முகமது இக்பால் என்பவரின் பையில் சோதனையிட்டபோது, உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட சுமார் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 160 விலையுயர்ந்த பழைய, புதிய செல்போன்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து செல்போன்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தஞ்சை கோட்டாட்சியர் அலுவலர் சுரேஷிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, அலுவலர் முகமது இக்பாலிடம் தேர்தல் நிலைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.