தஞ்சாவூர்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ நேற்று காலை கும்பகோணம் மாநகருக்கு வருகை தந்தனர்.
அவருக்கு மாநகர எல்லையான தாராசுரத்தில் மதிமுக சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து இருசக்கர, நான்கு சக்கர வாகன பேரணியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ, கும்பகோணம் விஜயலட்சுமி திரையரங்கிற்கு வருகை தந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு அவரது நினைவு நாளிற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அவருடன் அரசு தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை, க. அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி திரையரங்கில் மாமனிதன் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதனை வைகோ, துரை வைகோவுடன் இணைந்து மதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கண்டுகளித்தனர்.
முன்னதாக திரையரங்க வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதிய ஜனதாவை, மதவாத சக்திகளை எதிர்ப்போர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிகாரில், பாஜக வெற்றி பெற அங்கு மதவாத எதிர்ப்பு இயக்கங்கள் தனித்தனியாக 4 அணிகளாக களம் கண்டதே காரணம். ஆட்சி அமைத்த பாஜக அங்கு பெற்ற வாக்குகள் சதவீதம் வெறும் 24 சதவீதம் மட்டும் தான். ஆனால், தற்போது குஜராத் சட்டமன்றத்தேர்தலிலும் அதே தான் நடந்துள்ளது’ என்றார்.
கும்பகோணத்தில் அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் விபூதி பூசியிருப்பது குறித்த கேள்விக்கு, 'இவர்கள் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை, மதத்தின் பெயரால் மக்களிடையே வேறுபாடுகளை உருவாக்கி, அதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியை உயர்த்த நினைக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால், இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் ஒரு குறிப்பிட மத மக்களுக்கு ஆதரவாகத் தான் பேசும் இடங்களில் எல்லாம் மனுதர்மம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
முக்கிய மசோதாவான, ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அனுப்பிய 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி வலுவோடு இருக்கிறது. இதில் மேலும் சில கட்சிகள், இயக்கங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், இக்கூட்டணி மேலும் வலுவடையும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதனை மதிமுக தலைமையும், மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியின் தலைவருமான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இணைந்து முடிவு செய்வார்’ என்று மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாட்காட்டி கூட தெரியாத அவலம்: ராமதாஸ் அறிக்கை!