தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் இயங்காத வாகனங்களுக்கு சாலை வரி கேட்கும் மாநில அரசை கண்டித்து வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், "ஊரடங்கு காலத்தில் சாலை வரியை முற்றிலும் நீக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் வாகனர்களுக்கு விதிக்கப்பட்ட வட்டி, அபதாரங்களை முழுமையாக நீக்க வேண்டும்.
தவணையை கட்ட வலியுறுத்தும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு முடியும்வரை வங்கிகள் தவணையை வசூலிக்கக் கூடாது" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், "கரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் வாடகை ஊர்தி ஓட்டுநர் அனைவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும், காலாவதியான வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க ஊரடங்கு முடியும் வரை அவகாசம் வழங்க வேண்டும், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தி வாகன ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.