தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாடக கலைஞராக கடந்த 30 ஆண்டுகளாக அரிச்சந்திரா உள்ளிட்ட நாடக நிகழ்ச்சிகளில் நடித்து பல்வேறு பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நாடக கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அடையாள உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என நாடகக் கலைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் நாடக கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக அடையாள உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாடக கலைஞர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாடகக் கலைஞர் சீனிவாசன் என்பவர் அரிச்சந்திரன் வேஷத்தில் வந்து தனது அடையாள அட்டையை பெற்றார். தனது உறுப்பினர் அடையாள அட்டை வாங்குவதற்காக நாடகங்களில் போடப்படும் அரிச்சந்திரா கெட்டப்பில் கம்பீரமாக நடந்து வந்து அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, நாடகக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை பெற்றது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசின் கலை நிகழ்ச்சிகளில் நாடக கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திறமையான பெண் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்" - நடிகை சம்யுக்தா