இதுதொடர்பாக ஈ.டி.வி. பாரத் செய்தியாளர் கூறியதாவது:
கடந்த மார்ச் 24ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தபோது கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 2ஆம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டேன். பரிசோதனை முடிவில், ஏப்ரல் 6ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து, சிகிச்சையில் இருந்து வருகிறேன். உடலில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மிகச் சிறப்பான சிகிச்சையை அளித்துவருகின்றனர்.
இந்தச் சூழலில், இரண்டு நாட்கள் முன்பு எனது எட்டு ஆண்டு பத்திரிகை அனுபவம், நான் பேட்டி கண்ட தலைவர்கள், அந்தச் சூழல்கள் குறித்து "என்று தணியும் இத்தொற்று" என்ற தலைப்பில் "பேஸ்புக்"கில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப்படித்த திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், 20ஆம் தேதி காலை செல்போனில் அழைத்து நலம் விசாரித்தார்.
"உங்கள் உடல்நலம் எப்படி உள்ளது. குடும்பத்தினர் அனைவரும் நலமாக உள்ளனரா, வைரஸ் தொற்று எப்படி ஏற்பட்டது, இதுவரை எத்தனை டெஸ்ட் எடுத்துள்ளார்கள், ஒன்றும் கவலைப்படாதீர்கள், மீண்டும் நீங்கள் களத்தில் ஜொலிப்பீர்கள், உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை, என்ன உதவி வேண்டுமானாலும் தாராளமாக அழையுங்கள்" என்று உதயநிதி நம்பிக்கை ஊட்டினார்.
அன்றிரவு உதயநிதி திரும்பவும் அழைத்தார். அப்போது, திமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுவதாகக் கூறினார். செல்போனில் என்னை ஸ்டாலின் அக்கறையுடன் நலம் விசாரித்தார். உடல்நிலை, மருத்துவமனையில் அளிக்கப்பட்டுவரும் சிகிச்சையின் தரம், மருத்துவமனையில் வழங்கப்படும் வசதிகள் குறித்தும் அவர் விரிவாக விசாரித்தார். அடுத்தப் பரிசோதனை முடிவு நல்லபடியே வரும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என்றார்.
முன்னதாக, கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மறுநாள் ஏப்ரல் 7ஆம் தேதியன்று, திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும், எனது உடல்நிலை குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார்.
இவ்வாறு ஈடிவி பாரத் செய்தியாளர் தெரிவித்தார்.