தஞ்சாவூர்: இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி தலைமையில் கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில் சன்னதி தெருவில் நேற்று (ஜன.12) சனாதனம் போற்றும், கலாச்சார பொங்கல் என்ற பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தெரு முழுவதும்,செங்கரும்புகளால் அலங்காரம் செய்து 60 அடுப்புகளில் மண் பானையில் பொங்கல் வைக்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம இராமநாதன், பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், இவ்விழாவில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் கே.சரவணன் (காங்கிரஸ்) ஆகிய இருவரும் பங்கேற்றனர். பொங்கல் பானையில் பச்சரிசி இட்டு இந்த சனாதனம் போற்றும், கலாச்சார பொங்கல் விழாவினை தொடங்கி வைத்த நிகழ்வு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
சனாதன கொள்கையை நேர் எதிர் கொள்கையைக் கொண்ட இயக்கமாக திமுக விளங்குகிறது. மேலும், சனாதனத்தை எதிர்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் பேசிய விவகாரம் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் சனாதன பொங்கல் விழாவில் கலந்து கொண்டது பேசும் பொருளாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எப்போ பொங்கலிடணும்? பூஜை எப்படி செய்யணும்? முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கோங்க!