தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி(ONGC) நிறுவனங்களிற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் விளை நிலங்களில் கெயில் வாயு குழாயினை பதித்து எண்ணெய் எடுத்துச் செல்லக்கூடிய பணியும் நடைபெற்றுவருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் குடிநீருக்கும், சாகுபடிக்கும் தண்ணீரின்றி விவசாயிகள் தவித்து வருகின்றார்கள்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை பெற்று விவசாயத்தை காக்க வேண்டும், காவிரி சமவெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமையில் இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் ஒன்றுசேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக தஞ்சை தலைமை தபால் நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.