தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாஜக, விசிக, அமமுக ஆகிய அரசியல் கட்சிகளில் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 27 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் ராமநாதன் தலைமையில் ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இக்கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள். அப்போது திமுக கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் பேசும்போது, "அவரது வார்டில் சாலைப் பணிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஆணையரிடம் நீங்கள் போடுகிற சாலை ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்றை குறிப்பிட்டு பெண்களின் உள்ளாடையை குறிப்பிட்டு பாதாள சாக்கடை, குடிநீர் பைப் போடும் பணிகள் நடைபெறுவதாக உதாரணம் கூறினார்.
இதைக்கேட்ட பெண் கவுன்சிலர்கள் முகம் சுளித்தனர். பின்னர் இறுதியாகத் துணை மேயர் அஞ்சுகம் பூபதி பேசும்போது,"பெண்கள் அதிகமாக இருக்கும் மதிப்பிற்குரிய மாமன்ற கூட்டம், மாமன்ற இடம், மாமன்ற உறுப்பினர்கள் தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்துமாறும், பெண்களுக்குச் சங்கடங்கள் இல்லாதவாறு பயன்படுத்துமாறும் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார்". இது குறித்து மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பொது இடத்தில் திமுக உறுப்பினரின் நாகரிகமற்ற பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கழிவறையில் பெண்களை வீடியோ எடுத்த ஊழியர் கைது.. சென்னையில் பகீர் சம்பவம்!