திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையிலான கரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள், காவல் துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
கூட்டத்திற்கு பிறகு பேசிய மாவட்ட ஆட்சியர், ”அனைத்து ஊராட்சிப் பகுதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ளாட்சி நிர்வாகத்தால் கிருமி நாசினி தெளிக்கப்படவேண்டும். திருமணம், விசேஷம் ஆகியவற்றில் அரசு அனுமதித்துள்ள எண்ணிக்கையில் மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கபட்டுள்ளதா, தொற்று நீக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டதா? என்பதை உள்ளாட்சி துறையினர் கண்காணிக்க வேண்டும். அந்நிகழ்வுகளுக்கு வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டிலிருந்து வந்தவர்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவகம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவேண்டும். கடைகள் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை வணிகர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும் மாநில ஹெல்ப் லைன் எண் 1077, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 04362- 271695 ஆகிய எண்களுக்கு மக்க்ள் தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.
முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைவரும் கிருமி நாசினி கொண்டு கை சுத்தம் செய்திட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டும், கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த கையேடு மற்றும் அறிவுரைகள் அடங்கிய சிறுகுறிப்புரை வழங்கப்பட்டன.