தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வாளகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பிளாஸ்மா வங்கிற்கு பிளாஸ்மா தானம் வழங்க மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “கரோனா நோய்த்தடுப்பு பணிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா முறையில் சிகிச்சை மேற்கொள்ள பிளாஸ்மா தேவைப்படுவதால், கரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்கள் 28 நாள்களுக்குப் பிறகு அதிகப்பட்சமாக 90 நாள்களுக்குள் 18 வயது முதல் 55 வயதுக்குள்ள ஆண் பெண் இருபாலர் 55 கிலோ கிராமிற்கு மேல் உள்ள நபர்கள் தாங்களே முன்வந்து பிளாஸ்மா தானம் வழங்கலாம்.
இயல்பாக எப்பொழுதும் மற்ற இரத்ததானம் செய்ய கடைப்பிடிக்கப்படும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். பிளாஸ்மா தான கொடையாளர்கள் 28 நாள்கள் இடைவெளிவிட்டு மறுமுறை பிளாஸ்மா தானம் அளிக்கலாம்.
அதிகப்பட்சமாக இரண்டுமுறை மட்டுமே தானம் அளிக்கலாம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக பிளாஸ்மா கொடையாளர்கள் அதிகமாக பிளாஸ்மா கொடை வழங்கி பல உயிர்களை காக்க முன்வர வேண்டும்” என்றார்.