தஞ்சாவூர்: திரைப்பட நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த், நேற்று (டிச.28) சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இழப்பு, அவரை விரும்பும் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப்பெரும் பேரிடியாகும். இந்நிலையில், தமிழ்நாடு முழுக்க உள்ள அவரது தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆம்பலாபட்டு கிராமத்தில், நேற்று இரவு அப்பகுதி பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விஜயகாந்த் உருவப்படம் முன்பு ஒப்பாரி வைத்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கருப்பு பேட்ச் அணிந்து விஜயகாந்த் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இது குறித்து ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் சற்குணம் கூறுகையில், “சாப்பிட்டீங்களா என அனைவருக்கும் உணவளித்து ஓய்ந்து போன கைதான் விஜயகாந்த் கை.
உட்கார யார்ரா அவன் என்ற அதட்டலின் ஆளுமையாக இருக்கட்டும், என்னடா பெரிய பணம், விடுடா பாத்துக்கலாம் என்ற பக்குவமாக இருக்கட்டும், அது கேப்டன் விஜயகாந்த்-இடம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். அப்படிப்பட்ட மாமனிதனுக்கு எங்கள் கிராமத்து மக்கள் சார்பில் இதய அஞ்சலியை செலுத்துகிறோம்” என்றார்.
அதேபோல், தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம், ஜோதி தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார் உள்ளிட்ட விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி, பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: தொடங்கிய இறுதி ஊர்வலம்.. விடைபெறும் விஜயகாந்த்!