தஞ்சாவூர்: விவசாயிகளின் நெல் கொள்முதல் லாரி தஞ்சாவூரிலிருந்து தாராபுரம் நோக்கிச் சென்றபோது, சுக்காலியூர் அருகே குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் லாரியை தடுத்து நிறுத்தி நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதனால் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கரூர் மண்டல கிடங்கு முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கொள்முதல் மேற்கொண்ட வியாபாரிகளும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூற்று
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது, “தஞ்சாவூர் பகுதியில் உள்ள பல்வேறு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை காங்கேயம், தாராபுரம் பகுதிகளுக்கு உரிய ஆவணங்களுடன் இரண்டு லாரிகளில் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது கரூர் அருகே உள்ள சுக்காலியூர் தேசிய நெடுஞ்சாலையில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தடுத்து நிறுத்தி வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதனைக் கண்டித்து கரூர் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கு கரூர் மண்டல அலுவலகம் முன்பு ஜூலை 18ஆம் தேதி இரவு ஏழு மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
ஆனால் இன்று (ஜூலை.19) காலை வரை அலுவலர்கள் யாரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வராததால் காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
பல மணி நேரமாக எங்களை அலைக்கழித்து, தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிபக் கிடங்கு கரூர் மண்டல அலுவலகத்திற்கு அலுவலர்கள் வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். எனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்கக் கோரி தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.