தஞ்சாவூர்: இராஜராஜ சோழன் சதய விழாவினை முன்னிட்டு இராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் பெரிய நாயகி அம்மன், பெருவுடையார் சுவாமிகளுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது. இதனிடையே ராஜராஜ சோழன் சிலைக்கு தருமபுர ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தருமபுர ஆதீனம் சார்பில் பெரிய கோயிலில் நடைபெற்ற பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தருமபுர ஆதீனம், "திருவிசைப்பா பதிகம் பெற்ற ஊர் தஞ்சாவூர். இராஜராசேச்சரம் என்பது கோவிலின் பெயர். இராஜராஜ சோழன் சிவபாதசேகரன், பல நாடுகளுக்கு சென்றும், வடநாடுகளுக்குச் சென்றும் பல வெற்றிகளை கொண்டு வந்தவன், அழியா புகழ் பெற்ற திருக்கோவில்களை எழுப்பித்தவன். திருமுறைகளை நமக்கு தேடி எடுத்து கொடுத்தவன்.
அதனால் திருமுறை கண்ட சோழன் என்றும் போற்றப்படுவதுண்டு. தருமபுர ஆதீனத்தில் சதய நாளில், சித்திரை சதயத்தில் சீர்காழி கோயிலில் செப்பேடுகள் கிடைத்தது. அவை முழுவதும் திருமுறைகளைப் பற்றியதாகவே இருந்தது. அந்த தொடர்பினால் என்னவோ, இந்த சதய விழாவில் பெருவுடையாருக்கு தருமபுர ஆதீனம் சார்பில் அபிஷேகம் செய்வதற்குப் பேறு கிட்டியுள்ளது. சென்ற முறை சதய விழாவை, அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம். அதை அரசு நிறைவேற்றி இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும் பெண் ஓதுவார்கள் நியமனம் குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆதீன பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் பயிற்சி நடைமுறை படுத்து உள்ளோம். அதே போன்றுதான் பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டிற்கு 40 பதிகங்கள் என, ஐந்து ஆண்டுக்கு 4 ஆயிரம் பாடல்கள். அதை ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற்றால தான் படித்திருக்க முடியும்.
அதைப்போல் பதிகத்திற்கும் மனப்பாடம் உள்ளது, பன்முறைகளுக்கும் பாடல் இருக்கிறது, இதெல்லாம் ஆதீன பயிற்சிகளில் மட்டும் தான் வருகிறது. அரசு இசைக் கல்லூரி, இசை பள்ளிகளில் போன்ற எங்கும் இதைப் போன்ற நடைமுறைகள் இல்லை. ஆதீன மரபுப்படி பயிற்சி பெற்றால் தான் முழுமையாக இருக்கும். அத்தகைய தகுதி உடையவர்களை ஓதுவாராக நியமனம் செய்ய வேண்டும் என்பது தான் விருப்பம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விருதுநகரில் பழமையான அரிய சித்த மருத்துவச் சுவடிகள் கண்டுபிடிப்பு!