தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில், திருக்கயிலாய பரம்பரை திரு தருமையாதீனம் 27வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பாராட்டு விழா நேற்று (மார்ச்1) மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு செந்தில் முருகன் தலைமை தாங்கினார். இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்பா குருமணி என்ற தகாயூகி ஹோஷி, குரு மகா சந்நிதான சுவாமிகளை பாராட்டிப் பேசினார்.
பின்னர் தருமபுரம் ஆதீனம் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். முன்னதாக மங்கள இசை, பரதநாட்டியம், வீணை இசை உள்ளிட்ட இன்னிசை கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் தமிழ்நாட்டின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் வேஷ்டி, சட்டை மற்றும் புடவை ஆகியவற்றை அணிந்து வந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தருமபுரம் ஆதீனம், “ஜப்பான் நாட்டில், 1572ஆம் ஆண்டில் பழமையான மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சைவ நெறி உலகமெல்லாம் ஓங்குவதற்கு ஒப்ப அந்த நாட்டிலேயும் சைவ நெறி வளர்ந்திருக்கிறது. முகநூல் வழியாக குடமுழுக்கு திருவிழாக்களை தெரிந்து கொண்டு, அந்த நாட்டில் முருகன் கோயில் கட்டுகிறார்கள். அங்கே சைவத் திருக்கோயில் கட்ட இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபாடு செய்துள்ளனர். அவர்களின் நோக்கம் என்பது, சைவம் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்லாமல், தமிழ் மொழியும், ஜப்பான் மொழியும் வழிபாட்டு முறையில் ஒத்துப் போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு, தலங்களை வழிபாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்துள்ளனர். பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். வீடுகளிலும் தமிழைப் பற்றி பேச வேண்டும்.
ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து தமிழ் படிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ளவர்கள் தமிழ் படிப்பதை குறைவாக கருதுகிறார்கள். பெற்றோர்கள் தமிழ் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலையை அறிவித்தால், எல்லோரும் தமிழ் படிப்பார்கள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதில், அன்னை என்பது தாய்மொழி, பிதா என்பது வடமொழி. இந்த இரண்டும் இறைவனுக்கு உகந்த மொழி” என்றார்.
இதையும் படிங்க: வள்ளிமலை முருகன் கோயில் திருவிழா: மூக்குத்தி முருகன் இசைக் கச்சேரியுடன் களைகட்டியது