தஞ்சாவூர்: தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரி செலுத்துபவர்கள் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வருமான வரித்துறை சார்பில் இன்று (டிச 6) தஞ்சாவூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருமான வரி கூடுதல் ஆணையர் நித்யா கலந்து கொண்டு வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவது தொடர்பான நன்மைகள் குறித்துப் பேசினார். அப்போது அவர், "வருமான வரியை ஆண்டுக்கு நான்கு முறை செலுத்தும் வகையில் தோராயமான வருமான வரி தொகையை நான்காப் பிரித்து ஜூன் 15, செப்டம்பர் 15, டிசம்பர் 15, மார்ச் 15 என பிரித்து 15 சதவீதம், 45 சதவீதம், 75 சதவீதம், 100 சதவீதம் என அரசு நிர்ணயம் செய்துள்ளது.
கருவூலத்திற்கான பணத்தை நாம் தான் செலுத்த வேண்டும். முன்பு இருந்த அமலாக்க நிறுவனம் (Implement Agency) என்ற நோக்கு நிலையில் இருந்த வருமான வரித்துறை அலுவலகம் தற்போது நட்பு நகர்வு (Friendly Move) முறையில் செயல்படுகிறது. ஒவ்வொரு பரிமாற்றமும் மானிட்டர் செய்யப்படுகிறது.
சரியான வழி நடத்துதல் விழிப்புணர்வு இல்லாததால் வருமான வரி தாக்கலில் தவறுகள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வருமான வரி வசூல் தொகை அதிகமாக உள்ளது. ஆனால் அதன் மொத்த பலன் எதிர்மறையாக உள்ளது. அதற்குக் காரணம் கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரி திரும்பப் பெறுதலுக்கான உரிமை கோருதல் (Income Tax Refund Claiming) தவறான முறையில் பதிவு செய்யப்படுகிறது.
சம்பளம் வாங்குபவர்களால் வருமான வரி திரும்பப் பெறுதலுக்கான உரிமை கோருதலை அதிகளவு பதிவு செய்யப்படுகிறது. இந்த தகவல் வருமானவரித்துறை அலுவலகத்திடம் உள்ளது. 10 ஆண்டுகள் ஆனாலும் வருமான வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நியாயமான வருமானத்திற்கு உள்ள நியாயமான வரியைக் கட்டினால் போதும். கூடவும் கட்ட வேண்டாம் குறைத்தும் கட்ட வேண்டாம் நாட்டின் வளர்ச்சிக்காக வருமான வரியைக் கட்ட வேண்டும்.
இந்த கூட்டத்தில் வருமான வரித்துறை துணை ஆணையர் சீனிவாசன், தஞ்சாவூர் வருமான வரித்துறை அதிகாரிகள் வில்விஜயன், மஞ்சுளா, பட்டைய கணக்கர் குகனேஸ்வரன், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் மற்றும் வருமான வருமான வரி செலுத்துபவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; டிச.20-க்கு ஒத்திவைப்பு!