தஞ்சாவூர் மாவட்டம் வருவாய் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய மூன்று வட்டங்களில் வாழ்வதாரத்திற்காக சுமார் 750க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அரசு தடைவிதித்தது. இதனால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு மாடுகளை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தும் வந்தனர்.
இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவாய்த்துறையினர் மூலம் மாட்டு வண்டி தொழிலாளர்களின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதனடிப்படையில், முதற்கட்டமாக 280 தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் உரிமை வழங்குவதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு பொதுப்பணித்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று முதல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கொள்ளிடம் மணல் அள்ள அனுமதிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென பணியிட மாறுதல் பெற்றதால் புதிய ஆட்சியராக கோவிந்தராவ் பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து, புதிய ஆட்சியரின் அனுமதி பெற்ற பின்னர் தான் மணல் அள்ள அனுமதிக்க முடியும் என தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள், சிஐடியு அமைப்பினருடன் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
ஆற்றில் மணல் அள்ள வந்த அலுவலர்கள் - சிறைப்பிடித்த பொதுமக்கள்!