தஞ்சாவூர்: பாரதிதாசன் உறுப்பு கல்லூரியாக செயல்பட்டுவருகிறது மன்னர் சரபோஜி அரசு கல்லூரி. இங்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்தக் கல்லூரி மைதானத்தில் உள்ள சுற்றுச்சுவர்களை இடித்த சில அடையாளம் தெரியாத நபர்கள், அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, எலிசா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளார்.
ஆர்டிஐயில் தகவல் கேட்ட சமூக ஆர்வலர்
தொடர்ச்சியான புகார்களுக்கு பின்னரும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, தான் அளித்த புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை குறித்து, கடந்த மே மாதம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சமூக செயற்பாட்டாளர் சுரேஷ்குமார் கேட்டுள்ளார்.
அதில், கல்லூரி சுற்றுச்சுவர் ரூபாய் 26 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டடது. ஆனால், தற்போது அது இடிக்கப்பட்டு சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது என கூறி தான் அளித்த புகாரையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியரா இருந்தா கேள்வி கேளுங்க மிஸ்டர்...
இதற்கு பதிலளித்த அக்கலூரி முதல்வர் செந்தமிழ் செல்வி, தகவல் அறியும் சட்டம் 2005இன் டி இந்தியர்களுக்கு மட்டுமே தகவல் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தை அனுப்பி வைக்குமாறு பதில் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய சுரேஷ்குமார், “எங்கள் குடியிருப்புக்கு அருகில்தான் கல்லூரி மைதானம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுச்சுவரை இடித்து சமூக விரோதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். பலமுறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. தகவல் அறியும் சட்டத்தில் கேட்டதற்கு என்னை இந்தியர் என்று நிரூபிக்க ஆவணம் கேட்டுள்ளார் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வி
கல்லூரி முதல்வருக்கு கண்டனம்
தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் கேட்பதற்கு அடிப்படை தகவல்கள் அதாவது பெயர், தொலைபேசி எண் இருந்தாலே போதும், ஒரு வேளை அவ்வாறு சந்தேகம் இருப்பினும், எதன் அடிப்படையில் சந்தேகம் உள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால் அவர் எதுவும் இல்லாமல் பொதுவாக என்னிடம் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தை கேட்பது கண்டனத்திற்குரியது” என்றார்.
கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வியிடம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டபோது, ’சுரேஷ்குமார் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தொந்தரவுகள் செய்துவருகிறார். கல்லூரி பாதுகாப்பு குறித்து என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்று தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒரு கல்லூரி முதல்வர் சுவரை பாதுகாத்துக்கொண்டே இருக்க முடியாது. மேலும் எவ்வித ஆவணமும் இல்லாமல், மொட்டை கடிதம் போல் தகவல் கேட்டுள்ளார். இதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது’என்று முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: சொந்த வீடில்லை... உழைத்தப் பணத்தை மட்டுமே பயன்படுத்தினோம் - கிருத்திகா உருக்கம்!