குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அண்மையில், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பள்ளிவாசல் தெருவில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில், சட்டத்தைத் திரும்பப்பெறும் வரையில் போராட்டத்தை அமைதியான முறையில் தொடரப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிராக மனிதச் சங்கிலிப் போராட்டம்