தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி வாளாபுரம் ஊராட்சி. அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த தங்க அய்யப்பன், தன் சொந்த செலவில், ஆயிரம் ஏழை எளிய குடும்பங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி, காய்கறி அடங்கிய நிவாரண தொகுப்பு பைகளை வழங்கினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் ரா. துரைக்கண்ணு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைராசிக்காரர். அவருடைய ஆட்சியில் வறட்சி என்பதே தமிழ்நாட்டிற்கு ஏற்படாது. இதற்கு சாட்சியாக, இன்று மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. விரைவில் நூறு அடியை எட்டும்.
மேலும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய இழப்பீட்டு தொகை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாடு விவசாயிகளுக்கு, ரூ.8,225 கோடி, பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.