தஞ்சாவூர், அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், தடகளப் போட்டிகள், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாக இடவசதிகள் உள்ளன.
முன்னதாக, 100 மீட்டர், 200 மீட்டர், ஐந்தாயிரம் மீட்டர் என்ற அளவில் போட்டிகளை நடத்தும்போது மண் தரையிலான ஓடுதளத்தில் விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் ஓடவேண்டிய நிலை இருந்து வந்தது. மேலும், இந்தத் தளத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான ஓடுதளத்தில் ஓடும் மாணவர்களுடன் போட்டிகளில் பங்கேற்கும்போது சில சிரமங்களும் ஏற்பட்டு வந்தன.
இதனையடுத்து மதுரை, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைப் போன்று சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளப் பாதையை இங்கு அமைக்க வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் மத்திய அரசால் இந்திய விளையாட்டுக் குழுமம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக சர்வதேச அளவில் ஓடுதளப் பாதை மற்றும் மின் கோபுரம் அமைக்க 6.26 கோடி ரூபாய் நிதி தற்போது ஒதுக்கீடு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் சர்வதேச ஓடுதளப் பாதை அமைக்கும் பணி இன்று (அக்.16) தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி, அதிர்ஷ்ட ராஜ்ஆகியோர் இதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு, பணியினைத் தொடங்கி வைத்தனர்.