தஞ்சாவூர்: கும்பகோணம் கொட்டையூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கல்லூரி முதல்வர் அருளரசன், சக கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் முன்னிலையில், தேசியக்கொடியை ஏற்ற வந்துள்ளார்.
அப்போது கொடிமரம் அருகே மேஜை ஒன்றை போட்டு, அதன் மேல் ஸ்டூல் ஒன்றை வைத்து, அதன் மீது ஏறி நின்று நீண்ட நெடிய உயரம் கொண்ட வளைந்த மூங்கில் கொடி கம்பத்தில் கொடியேற்றியுள்ளார்.
நேராக உள்ள கொடிக்கம்பத்தில் தான் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்பது விதி, அந்த விதியை கண்டு கொள்ளாமல், வளைந்த கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். கொடி மர உயரத்திற்கு ஏற்ப அதற்கான கயிறு நீளமாக இல்லாததால், இப்படி, அலங்கோலமாக, மேஜை மீது ஸ்டூல் போட்டு, அதன் மீது ஏறி நின்று அருளரசன் தேசிய கொடி ஏற்றி வைத்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
அரசு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவை கொண்டாட தனியாக நிதி வழங்கி வருகிறது. மேலும் நல்ல வருவாயில், தேசிய கொடி ஏற்ற தகுதியான மரத்தை தேர்வு செய்யாமல், வளைந்த நெடிய உயரம் கொண்ட மரத்தையும், சரியான கயிறை இல்லாமலும் சுதந்திர தின விழா கொண்டாடிய செயல் வருந்தத்தக்கது.
இப்படி தேசிய கொடி ஏற்றும் விஷயத்தில், விதிகளுக்கு புறம்பாக அலட்சியமாக செயல்பட்ட கல்லூரி முதல்வர் அருளரசனை பணியிடை நீக்கம் செய்து அவர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேச அபிமானிகளும், சமூக ஆர்வலர்களும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தலைமை செயலாளருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்தில், நிரந்தர கொடி மரம் இல்லாதது வேதனையளிக்கிறது. எனவே இங்கு நிரந்தர கொடி மரம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘வீடுதோறும் விருட்சம்’ என்ற திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டம்