தஞ்சாவூர்: தேங்காய் ஒன்றுக்கு 25 ரூபாயும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலினால் பல இடங்கள் தென்னை விவசாயம் பாதிக்கபட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தென்னை மரக்கன்றுகள், அரசால் வழங்கப்பட்டு தற்போது தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போதுவரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை பேரணி நடைபெற்றது, இப்போரணி மதுக்கூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பேரணி முடிவடைந்தது. தேங்காய் ஒன்றுக்கு 25 ரூபாய், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 250 ரூபாய் விலை நிர்ணயம் செய்து தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு கஜா புயலுக்கு பிறகு தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்து. கடைகளில் ஒரு தேங்காய் 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது, இதே போல் இளநீர் 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் தேங்காய் மட்டும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தரகர்கள் தங்களிடம் ஒரு தேங்காய் வெறும் மூன்று ரூபாய் நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்து சந்தைகளில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதனை தடுப்பதற்கு தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயில் வழங்குவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள முன் வைத்தனர்.
இதற்கு முன்னதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தர்கள் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் மாநிலம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க : உயரும் புலிகள் எண்ணிக்கை - சத்தியமங்கலம் காப்புக்காட்டிலிருந்து மகிழ்ச்சித் தகவல்