தஞ்சாவூர்: முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமான நேற்று (டிசம்பர் 29) தஞ்சாவூர் சென்றார். மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகளை ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு 98 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான 90 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார்.
இதில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்ட மணிக்கூண்டுடன் கூடிய ராஜப்பா பூங்கா, கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சரபோஜி சந்தை ஆகியவை திறந்துவைக்கப்பட்டன.
மேலும் 894 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 134 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் 43 ஆயிரம் பயனாளிகளுக்கு 237 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, ரகுபதி, சக்கரபாணி, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'புத்தாண்டு 2022; நள்ளிரவு 12 மணிக்கு கோயில்கள் திறக்கப்படும்'